சித்த மருத்துவம் (Siddha Maruthuvam), தமிழர்களின் பாரம்பரிய மற்றும் தொன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றாகும். இந்திய மருத்துவத்தில் முதன்மையாக தோன்றியது சித்த மருத்துவம் ஆகும். பாரம்பரிய மருத்துவ உலகில் சித்த மருத்துவம் 5,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. நவீன மருத்துவத்திற்கு மாற்றாக இயற்கையான மருத்துவ முறையை தேடுபவர்களுக்கு, சித்த மருத்துவம் ஒரு பொக்கிஷமாகும். சித்த மருத்துவத்தை பண்டைய காலத்தில் 18 சித்தர்கள் உருவாக்கினர். சித்தர்கள், துறவிகள் மற்றும் யோகிகள் சித்த மருத்துவத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். இவர்களின் அறிவும் அனுபவமும் சித்த மருத்துவத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.
சித்த மருத்துவ முறையை பதினெட்டு சித்தர்கள் உருவாக்கினர். மனம், புத்தி, சித்தம் என மூன்றையும் அடக்குபவரே சித்தர்கள் எனப்பட்டனர். அகத்தியர் சித்த மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
சித்த மருத்துவம் மூன்று முக்கிய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. அவை வாதம், பித்தம், கபம்.இந்த மூன்று தத்துவங்கள் உடலின் சமநிலையை பராமரிக்கின்றன. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தத்துவங்களின் சமநிலையை பாதுகாப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே சித்த மருத்துவத்தின் முக்கிய கோட்பாடாகும்.
வாதம் என்பது காற்று மற்றும் ஆகாயத்தின் கலவையாகும். இது உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது நரம்புகள், மூட்டுகள், மற்றும் தசைகள் போன்ற உடல் அமைப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. வாயு சமநிலையில்லாமல் இருந்தால் மூட்டுவலி, தலைவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படும். வாயு சமநிலையில் இருக்கும்போது உடலின் இயக்கம் மற்றும் சக்தி சரியாக இருக்கும்.
பித்தம் நெருப்பு மற்றும் நீரின் கலவையாகும். இது உடலில் ஜீரண சக்தி மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தை(metabolism) கட்டுப்படுத்துகிறது. இது உணவு சத்துகளைச் செரிப்பதற்கும், உணவு சத்துக்களை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவதற்கும் உதவுகிறது. பித்தம் சமநிலையில்லாமல் இருந்தால் செரிமானக் கோளாறுகள், எரிச்சல் மற்றும் தோல் பிரச்சினைகளை ஏற்படும். பித்தம் சமநிலையில் இருக்கும்போது செரிமானம் மற்றும் உடல் உஷ்ணம் சரியாக இருக்கும்.
கபம் நிலம் மற்றும் நீரின் கலவையாகும். இது உடலின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பைச் சார்ந்தது. உடலின் நிலைத்தன்மையை (Stability) மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை(Immunity) நிர்வகிக்கின்றது. இது உடலின் தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது. கபம் சமநிலையில்லாமல் இருந்தால் சளி, உடல் பருமன் மற்றும் ஆற்றல் குறைவு ஏற்படும். கபம் சமநிலையில் இருக்கும்போது, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.
சித்தர்கள் வாதம் 84, பித்தம் 48, சிலேத்துவம் 96 ஆகியவற்றால் ஏற்படும் பிணிகளை அகற்ற பல இயற்கை மூலிகைகள், பாடாணங்கள், உலோகள் மற்றும் பல பொருட்களைக் கொண்டு மருந்துகள் செய்யும் முறைகளை தந்துள்ளனர்.
சித்த மருத்துவம் சூரணம், செந்தூரம், பஸ்பம் லேகியம், பாடாணம், மாத்திரை, எண்ணெய் போன்ற மருந்து வகைகளைக் கொண்டது. இவற்றின் மருத்துவ குணங்கள் நோய் வராமல் காக்கும் தன்மையும், வந்தபின் நோயை நீக்கும் தன்மையும் இந்த மருந்துகளுக்கு உண்டு.
சித்த மருத்துவத்தில் அக மருந்துகளாக (உள்ளுக்குள் சாப்பிடும்) சுரசம், நீர், கியாழம், சாறு, குடி, கற்கம், களி, அடை, சூரணம், பிட்டு, வடகம், வெண்ணை, நெய், பாகு, எண்ணெய் மாத்திரை, சுவைப்பு (இரசாயனம்), பற்பம், தேனூறல், மெழுகு, குழம்பு, பதங்கம், செந்தூரம், உருக்கு, கட்டு, சுண்ணம் போன்ற 32 முறைகளில் நோய் தீர்க்கப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் புற மருந்துகளாக (வெளிப்புற சிகிச்சை) ஊதல், களிம்பு, சீலை, வர்த்தி, கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, பசை, வேது, பொட்டணம், பொடி, முறிச்சல், கீறல், கொம்பு கட்டல், உறிஞ்சல், குரு, திவாங்கல் போன்ற 32 முறைகளில் நோய்கள் குணமாக்கப்படுகிறது.
கசாயம் என்பது மூலிகைகள் மற்றும் பிற மூலப்பொருட்களை நீரில் காய்ச்சி, வடிகட்டி எடுக்கப்படும் ஒரு திரவ மருந்தாகும். இது உடலுக்குள் எளிதாக சென்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பொதுவாக, கசாயம் உடல் வெப்பத்தை குறைக்கும், எலும்பு பலத்தை அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் திறன்களைக் கொண்டுள்ளது. காய்ச்சல், வயிற்றுவலி மற்றும் பல நோய்களுக்கு பல கசயங்கள் உள்ளன.
லேகியம் என்பது ஒரு மெல்லிய பசை போன்றது. இது மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்களை நன்கு அரைத்து, திரவத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது. லேகியம் பொதுவாக உடல் சக்தியை அதிகரிக்கவும், ஜீரணசக்தியை மேம்படுத்தவும் மற்றும் தொற்றுநோய்களை தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. பல நாள்பட்ட நோய்களுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பலவகையான லேகியங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
தைலம் தைலம் என்பது எண்ணெய் மருந்தாகும். இது மூலிகைகளை எண்ணெயில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. தைலம் நரம்பு பிரச்சினைகளுக்கும், உடல் வலி, மூட்டுவலி, தலைவலி மற்றும் பல்வேறு வலிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
சூரணம் சூரணம் என்பது மெல்லிய தூள் வடிவத்தில் இருக்கும். சூரணம் மூலிகைகள் மற்றும் பிற பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்து தயாரிக்கப்படுகிறது. சூரணம் பொதுவாக ஜீரணத்தை மேம்படுத்தவும், நோய்களை தடுப்பதற்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தற்கும் பயன்படுத்தப்படுகிறது. நோய்களுக்கு தகுந்தவாறு பல வகையான சூரணங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
சித்த மருத்துவத்தில் ஆற்றல் மிகுந்த மூலிகைகள், தாவரங்கள் மற்றும் பிற இயற்கையான பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை உடலின் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.
சித்த மருத்துவத்தில் முக்கியமாக பயன்படுத்தப்படும் சில மூலிகைகள்:
துளசி ஒரு சக்திவாய்ந்த மூலிகையாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. துளசி காய்ச்சல், இருமல், சளி மற்றும் சிறுநீரக சம்பந்தமான கோளாறுகளுக்கு பயன்படுகிறது.
நெல்லி என்பது வைட்டமின் சி நிறைந்த ஒரு மூலிகையாகும். இது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் வயது முதிர்வு போன்றவற்றிற்கு பயன்படுகிறது.
நிலவேம்பு என்பது சித்தவைத்தியத்தில் முக்கியமான மூலிகையாகும். கசப்புச்சுவை கொண்ட இந்த மூலிகை காய்ச்சல், கல்லீரல் குறைபாடு, உடல் அசதி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
சதாவரி பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. சதாவரி மனநலம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
தூதுவளை மூச்சுக்குழாய் சம்பந்தமான நோய்களுக்கும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கவும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. தூதுவளை முகத்தில் ஏற்படும் பிம்பிள் மற்றும் பருக்களை குணமாக்கவும் பயன்படுகிறது.
இந்த மூலிகைகள் அனைத்தும் சித்த மருத்துவத்தில் முக்கியமானவை. இந்த மூலிகைகள் பல்வேறு உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளை குணமாக்கும் திறன் கொண்டவை. இவ்வாறு, சித்த மருத்துவம் மூலிகைகளின் மருத்துவ குணங்களை முழுமையாகப் பயன்படுத்தி நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சித்த மருந்துகள் இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது. மருந்துகளை தவறான முறையில் பயன்படுத்தினால், அல்லது அளவுக்கு மீறி உட்கொண்டால் தீவிர பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம். மேலும் அலோபதி மற்றும் பிற மருந்துகளோடு சேர்த்து சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்த பிற மருந்துடனும் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
சித்த மருத்துவத்தின் முக்கிய பக்க விளைவுகள் சில:
வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தோல் அலர்ஜி, தலைவலி ஆகியவைகள் அடங்கும். சில நேரங்களில் பக்க விளைவுகள் உட்கொள்ளும் மருந்தின் மூலிகைகள் அல்லது வேதியியல் சேர்மங்களுக்கு ஏற்ப மாறுபடும். எனவே, சிகிச்சையை தொடங்குவதற்கு முன் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவரை அணுகுவது அவசியம்.