மூலிகை மருத்துவம் என்பது இந்தியாவின் மிகவும் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகும். மூலிகை மருத்துவம் வேத காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. உதாரணமாக இராமயணத்தில் லட்சுமணனை காப்பாற்ற மூலிகை தேவைப்பட்டதால் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு சென்றார். இதன் மூலம் இராமாயண காலத்திலிருந்தே மூலிகைகள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் அறியலாம். மேலும், பழைய நூல்களில் மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூல்களில் சாதாரண நோய்கள் முதல் கடுமையான நோய்கள் வரை குணமாக்கும் மூலிகைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை 8000 மருத்துவ தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இந்திய தாவரவியல் ஆய்வு (BSI) தெரிவித்துள்ளது. இந்தியாவில் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் ஆகியவற்றில் மூலிகைகளின் பங்கு இன்றியமையாதது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களின் சமநிலைக்கு மூலிகைகள் பயன்படுகின்றன. சீனாவிலும் மூலிகை மருத்துவம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. சீன மூலிகை மருத்துவம் (TCM) என்பது சீனாவின் மருத்துவ பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
மூலிகை மருத்துவத்தை பயன்படுத்தும் முன் ஒவ்வொரு மூலிகைகளின் பக்க விளைவுகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டு வேறு மருந்துகளை பயன்படுத்துபவர்கள் மூலிகை மருந்தை பயன்படுத்தும் முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.