Diabetes(நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய்) என்பது உலகளவில் பல மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாகும். நீரிழிவு நோயின் முதல் வகையில் உடல் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகும். இரண்டாவது வகையில் உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாது போகும். இன்சுலின் என்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். இது உடலின் சக்தி மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு அவசியமானது. இந்நோயினால் உடலில் போதுமான இன்சுலின் இல்லாமல் குளுக்கோஸ் இரத்தத்தில் உருவாகிறது. இதனால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நோயை சிறந்த முறையில் நிர்வகிக்க ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது அவசியம்.
நீரிழிவு நோய் வகை 1 என்பது ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கணையத்தில் உள்ள இன்சுலினை உற்பத்தி செய்யும் பீட்டா செல்களைத் தாக்கி அழிக்கிறது. இந்த வகை நீரிழிவு நோய் பொதுவாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கண்டறியப்படுகிறது. இருப்பினும் இது எந்த வயதிலும் ஏற்படலாம். நீரிழிவு நோய் வகை 2 மிகவும் பொதுவானது. இந்த வகை உடல் இன்சுலினை எதிர்க்கும் போது அல்லது கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது உருவாகிறது. இது பெரும்பாலும் முதுமை, உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
நீரிழிவு நோயின் முதன்மையான அறிகுறிகளில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழித்தலாகும். இது மருத்துவத்தில் பாலியூரியா என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயின் அறிகுறிகள் உள்ள நபர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கின்றனர். அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் அதிமாக சிறுநீர் கழிக்கின்றனர். இரத்ததில் குளுக்கோஸ் அதிகரிக்கும் போது சிறுநீரகங்கள் அதிகப்படியான சர்க்கரையை வடிகட்டுவதன் மூலம் இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய முயற்சி செய்கின்றன. இதனால் அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் விளைவாக, உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
எதிர்பாராத எடை இழப்பு பெரும்பாலும் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் காரணமாக ஏற்படும் எடை இழப்பு போலல்லாமல், விவரிக்க முடியாத திடீர் எடை இழப்பு சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அதிகப்படியான தாகம்(பாலிடிப்சியா) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நீரிழப்புக்கு காரணமாகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, சிறுநீரகங்கள் அதிகப்படியான குளுக்கோஸை வடிகட்டுவதற்கும், உறிஞ்சுவதற்கும் போராடுவதால் சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. இழந்த நீரைப் பெறுவதற்கு அதிக தாகம் ஏற்படுகிறது.
அதிகப்படியான பசி மருத்துவ ரீதியாக பாலிஃபேஜியா என்று அழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறியாகும். போதுமான அளவு கலோரிகளை எடுத்துக் கொண்டாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து பசியை ஏற்படுகிறது. குளுக்கோஸை உடல் சரியாகப் பயன்படுத்த முடியாததால் இந்த நிலை ஏற்படுகிறது.
நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளில் தொடர்ந்து சோர்வு மற்றும் பலவீனமாகும். உடல் ஆற்றலுக்காக குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாமல் போவதால் நோயாளிகளுக்கு சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படுகிறது.
நீரிழிவு நோயின் குறைவாக அறியப்பட்ட அறிகுறிகளில் ஒன்று மங்கலான பார்வையாகும். உயர் இரத்த சர்க்கரை அளவுகள் உள்ளவர்களுக்கு பார்வைத் திறன் கணிசமாக பாதிப்பு ஏற்படலாம். உயர் இரத்த சர்க்கரை அளவு கண்களின் லென்ஸ் வீக்கத்தை ஏற்படுத்தி மங்கலான பார்வைக்கு வழிவகுகின்றன. இதற்கு சிகிச்சையளிக்காவிட்டால் குருட்டுத்தன்மை மற்றும் தீவிரமான கண் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
நீரிழிவு நோயின் குறிப்பிடத்தக்க அறிகுறிகளில் ஒன்று காயங்கள் மெதுவாக குணமாதல் மற்றும் அடிக்கடி ஏற்படும் தொற்றுகள். உயர் இரத்த சர்க்கரை அளவுகள், உடலின் இயற்கையான காயங்களை குணப்படுத்தும் செயல்முறைகளை பாதிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, காயம் குணமடைவதை மெதுவான மற்றும் கடினமானதாக மாற்றுகிறது.
கண்டறியப்படாத மற்றும் சிகிச்சையளிக்கப்படாத நீரிழிவு ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோயின் முதன்மையான அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்திருப்பதன் மூலம் சிறந்த மருத்துவ ஆலோசனை பெற்று நீரிழிவு நோய்க்கான மருத்துவ சிகிச்சைகளைப் பெறமுடியும்.